கரூர் மாநகர பேருந்து நிலையத்தை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு அருகிலேயே அரசு அனுமதி பெற்ற மதுபானக்கூடங்கள் இயங்கி வருகின்றன. திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளுக்கும், மதுபான கூடங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் பேருந்து நிலையம் முன்புறம் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையின் அருகில் அமைந்துள்ள மதுபான கூடத்தில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அவ்வழியாக வந்த கரூரை சேர்ந்த வழக்கறிஞர் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் விடுமுறை தினத்தில் சட்டவிரோதமாக மதுபான பார் இயங்கி வந்தது குறித்து, கரூர் நகர காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். காவல் நிலையத்துக்கு புகார் சென்றதை அடுத்து மதுபான கூடத்தை ஊழியர்கள் உள்பக்கமாக பூட்டி வைத்துள்ளனர்.
தகவலின் பெயரில் அங்கு வந்த கரூர் நகர போலீசார் மதுபான கூடத்தின் கதவை தட்டிப் பார்த்ததுடன், ஒரு பக்கமாக பூட்டப்பட்ட ஷட்டர் கதவை கம்பு ஒன்றை வைத்து திறந்து பார்த்துள்ளனர். ஆனால், பார் ஊழியர்கள் போலீசார் அழைத்தும் வெளியே வர மறுத்து, பூட்டிய கதவை திறக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டவிரோதமாக இயங்கிய மதுபான கூடத்தை உள்பக்கமாக பூட்டி வைத்து பார் ஊழியர்கள் திறக்க மறுப்பதால் போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதே இடத்தில் காத்திருக்கின்றனர்.