கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கை குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஒரு இளம்பெண் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தான் மறைத்துக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தன்மேலும் தனது குழந்தை மீதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இதனை கண்டதும் உடனடியாக அந்த பெண்ணை பிடித்து கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து தூக்கி வீசினர்.
மேலும் இந்த பெண்ணின் மீதும் குழந்தை மீதும் தண்ணீரை ஊற்றினர்.
இதுகுறித்து அந்த பெண் தெரிவித்ததாவது..
தன் பெயர் நந்தினி எனவும் நான் தன் குழந்தையுடன் கணவரை விட்டு பிரிந்து இருப்பதாகவும், கடந்த 11ஆம் தேதி தனது தந்தை வசிக்கும் ஊரான புலியூர் வெங்கடாபுரம் கிராமத்திற்கு சென்ற பொழுது, தனது தந்தை மற்றும் பெரிய மகன்கள் சேர்ந்து தன்னை அடித்து உதைத்து, தான் போட்டிருந்த உடைகளை கிழித்து துரத்தி விட்டார்கள். அதன் பிறகு காயங்களுடன் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டது.
அங்கு வந்த பசுபதிபாளையம் போலீசாரிடம் தன்னை தாக்கியவர்களின் மீது புகார் அளித்ததாகவும் அந்த புகார் குறித்து பசுபதிபாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதனால் மன உளைச்சலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முடிவெடுத்து வந்தேன் என தெரிவித்தார். போலீசார் அந்த பெண்ணையும் அவரின் கை குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.