கரூர் அடுத்துள்ள மறவாபாளையம் என்ற பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வீடியோ குழு அலுவலர்களின் வாகனத்தை மறித்து , அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, வீடியோ கண்காணிப்புக்குழு அலுவலர் வினோத்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக தங்கவேல் என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான எம் ஆர் விஜயபாஸ்கர் தொடர்ந்து அனைத்து பகுதியிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், கரூர் அரங்கநாதன் பேட்டை என்ற பகுதியில் தேர்தல் விதிமுறையை மீறி 10 க்கும் மேற்பட்ட கார்களில் காலை முதல் தொடர்ந்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வீடியோ குழு அலுவலர் வினோத் குமார், அதிமுகவைச் சேர்ந்த ஜெகன் என்பவரிடம் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்து வருகிறீர்கள். விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதை தொடர்ந்து 31.03 24 மதியம் 2.45 மணியளவில் கரூர் மாவட்டம் மறவாபாளையம் பகுதியில் அதிமுகவினர் பிரச்சாரம் செய்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை வீடியோ மூலம் கண்காணிக்கும் பணியில் அலுவலர் வினோத்குமார் கேமராமேன் ஹரிஹரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அப்போது, முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், ரமேஷ்குமார், மதுசூதனன், கார்த்தி, ஜெகன் மற்றும் பலர் தேர்தல் நடத்தை கண்காணிக்கும் அலுவலரின் வாகனத்தை தடுத்து நிறுத்தி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசி உள்ளனர். மேலும், கேமராமேன் ஹரிஹரனை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டி உள்ளனர். இதை அடுத்து வாங்கல் காவல் நிலையத்தில் வீடியோ கண்காணிப்பு குழு அலுவலர் வினோத்குமார் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், ரமேஷ் குமார், மதுசூதனன், கார்த்தி மற்றும் ஜெகன் ஆகியோர் மீது சட்ட பிரிவு 143, 341, 294 (b) 354, 506 (11), 177 என ஆறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.