கரூர்-28.10.2023
கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த இடையபட்டி கிராமத்தை சேர்ந்த தங்கசாமி (லேட்) என்பவரின் மனைவி வெள்ளத்தாய் (60). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வரும் நிலையில், வெள்ளத்தாய் மட்டும் தனியாக அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே மர்மமான முறையில் தலைப்பகுதியில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம், பக்கத்தினர் பாலவிடுதி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பாலவிடுதி போலீசார் ரத்த காயங்களுடன் வீட்டின் முன்பு சடலமாக கிடந்த வெள்ளத்தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? முன் விரோதம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.