கரூர் மாநகர பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் சிக்னல் போடப்பட்ட நேரத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடந்து சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். அப்போது சிக்னல் நேரம் முடிந்து திடீரென்று வாகனங்கள் சாலையை கடந்து செல்ல, முதியவர் கீழே விழுந்ததை அறிந்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் வேகமாக பிரேக் பிடித்தும், வாகனம் சிறிது தூரம் தள்ளி நின்றது. இதில் வேன் அடிப்பகுதியில் அந்த முதியவர் சிக்கிக்கொண்டார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் வாகனத்தின் அடிப்பகுதியில் உள்ள கம்பி மற்றும் ஒயர் ஆகியவற்றில் சிக்கிக்கொண்ட அந்த முதியவரை போராடி மீட்டனர். அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுன்றி உயிர் தப்பிய முதியவர், அதிர்ச்சியில் இருந்ததால் படபடப்புடன் காணப்பட்டார். முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக அங்கிருந்த பொதுமக்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.