கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி பிரிவு அருகே இன்று 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, திண்டுக்கல் போக்குவரத்து மண்டலத்தைச் சேர்ந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதே போல திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி தமிழ்ச்செல்வி வயது 50 என்பவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா இனுங்கனூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மகன் தருண்குமார் டூவீலரில் தமிழ் செல்வியை அவர்களது வீட்டிற்கு அரவக்குறிச்சியில் இருந்து மார்க்கப்பட்டி செல்லும் சாலையில் அழைத்து சென்றார். இவர்களது வாகனம் தண்ணீர் பந்தல் அருகே வந்த போது எதிர் திசையில் வேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தூக்கி எறியப்பட்ட தமிழ்ச்செல்வி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மகன் தருண்குமார் படுகாயம் அடைந்தார். இந்த இரண்டு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரவக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் இரு வேறு சம்பவங்களில் இருவர் உயிரிழந்த சம்பவம் அரவக்குறிச்சி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.