ஆடி 18 ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் புனித நீராடி கன்னிமார் சுவாமி கும்பிடுவது வழக்கம். இந்த ஆண்டு காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கும் மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் ஆற்றின் இரு கரை தொட்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெரூர், வாங்கல், புகழூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட காவிரி கரையோரங்களில் பொதுமக்கள் இறங்கும் இடங்களில் பேரி
கார்டுகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆற்றுக்கு அருகில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்த போலீசார் அனுமதி அளித்து வந்தாலும் ஆற்றுக்கு செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர். முளைப்பாரி வைத்து சாமி கும்பிட வந்தவர்களையும், கரூர் நகரிலிருந்து வேன்களில் வரும் பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். நெரூர் கிராமத்தில் ஒரு சில உள்ளூர் வாசிகள் ஆபத்தை உணராமல் காவிரி ஆற்றில் குளித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீராடவும், சாமி கும்பிடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.