Skip to content

கரூர் அருகே சிறுத்தை நடமாட்டம்… மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து ஆட்டுப்பட்டியில் இருந்த ஒரு ஆடு இறந்த நிலையிலும், மற்றொரு ஆடு மர்ம விலங்கால் கடிபட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆடுகளை கடித்த விலங்கு எது என்பது தெரியாமல் இருந்த நிலையில் சம்பவ இடத்தில் வனத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அடிப்படையில் ஆடு கடிபட்ட இடம் மற்றும் அருகாமையில் பதிந்துள்ள சிறுத்தை கால் தடத்தை வைத்து ஆய்வு செய்தபோது அது சிறுத்தையாக இருக்கலாம் என வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கூறுகையில் கடந்த வாரத்தில் அருகாமையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்டு அதை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட கால் தடமும் தற்போது இங்கு எடுக்கப்பட்ட கால் தடமும் பெருமளவு ஒற்றுமையாக உள்ளதால் அந்த சிறுத்தை இடம் பெயர்ந்து இங்கு வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த சிறுத்தையை பிடிப்பதற்காக 4 கூண்டுகள், 3 வலைகள் மற்றும் வனத்துறையை சேர்ந்த அதிவிரைவு படையினர் கொடைக்கானலில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக இரவு நேரங்களிலும் நன்றாக பதிவாக கூடிய வகையில் அதி நவீன 19 கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. எனவே மாலை நேரம் முதல் குழந்தைகள் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் அவசியம் வருவதாக இருந்தால் இரண்டு மூன்று பேராக சேர்ந்து கையில் கம்பு மற்றும் கை விளக்குடன் வரவேண்டும். ஆட்டுப்பட்டிகளில் இரவு முழுவதும் விளக்குகளை எரிய விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சுற்று வட்டார பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 24 மணி நேரமும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சிறுத்தையை பிடிப்பதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!