கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேர்ந்த 13 மாணவிகள் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெப சஹேயு இப்ராஹிம் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகியோருடன் திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்கு நாடார் கல்லூரியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர்.
போட்டிகள் முடிந்து கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் அமைந்துள்ள கதவனை பூங்கா ஆகியவற்றை சுற்றி பார்த்துவிட்டு ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது, எதிர்பாராத விதமாக சோபியா, இனியா, லாவண்யா, தமிழரசி ஆகிய நான்கு மாணவிகள் ஆழமான பகுதிக்கு சென்றனர். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர்.
மாணவிகள் நீரில் மூழ்கியது குறித்து தகவல் அறிந்த கரூர் மற்றும் முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, ஆற்றில் மூழ்கிய மாணவிகளை தேடும் பணிகள் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மாணவிகள் நான்கு பேர் உடல் சடலமாக மீட்கப்பட்டது. நான்கு பேர் உடல்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் உயிரிழந்த மாணவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். இச்சம்பவத்தால் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.