கரூர், வடிவேல் நகர் அடுத்த சக்தி நகர் குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அமராவதி (72) அவரது கணவர் சுப்பிரமணி. இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சுப்பிரமணி இன்று காலை உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுள்ளார். சுப்பிரமணி வெளியூர் சென்ற நேரம் பார்த்து, அமராவதி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து மூதாட்டியின் தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். கொலை குறித்து அருகில் இருந்தவர்கள் கரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏற்கனவே இன்று பிற்பகல் வெங்கமேடு அடுத்த அரசு காலனி பகுதியில் பெண்மணி ஒருவர் கொலையான நிலையில், அடுத்தடுத்து கரூர் பகுதியில் இரண்டாவது கொலை நடந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.