கரூர் மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியங்களில், 751 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. யு.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, 38 ஆயிரத்து 812 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தோடு உள்ளன.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்து வந்தது. தற்போது மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி குழந்தைகள் படையெடுத்து வருகின்றனர். 2022-23ம் ஆண்டில், ஒன்றை இலக்கத்தோடு மாணவர் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 44, இந்த கல்வியாண்டில் அது 73 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் நெடுங்கூர், வெங்கடாபுரம் ஆகிய இரண்டு தொடக்கப் பள்ளிகளில், ஒரு மாணவர் கூட கல்வி பயில சேராததால், அப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. அங்குள்ள ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அரசு பளளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை என்பது ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால், ஐந்து ஆண்டுகளில் அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது இல்லாமல் போய் விடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகள் தரத்துக்கு உயர்த்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எப்படி கற்பிக்கிறார்கள் என்ற கேள்வியும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது.
அதிக சம்பளம் பெறும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பொறுப்பை உணர்ந்து, தனியார் பள்ளிக்கு நிகராக நம் மாணவர்களையும் முன்னேற்ற வேண்டும் என பயிற்சி அளிக்கிறார்களா என்றும் பெற்றோர் கேட்கிறார்கள். சம்பளத்துக்காக போராடும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் கல்வி தர உயர்வுக்கும் உழைக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் நிலை விரைவில் வந்துவிடும் என்று பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.