கடந்த 10 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிரஷர், டிப்பர் லாரி மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கரூர் மாவட்ட கல் குவாரி மற்றும் கிரசர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி நிருபர்களிடம் கூறுகையில்… குவாரிகளை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் குவாரிகளில் டிஜிட்டல் சர்வே என்ற பெயரில் நடத்தப்படும் அளவீடுகளில் முரண்பாடு உள்ளது. குவாரி உரிமையாளர்களை நேரில் வைத்துக் கொண்டு அளவீடுகள் செய்யாமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரு நிறுவனங்கள் பாலங்கள் சாலைகள் உள்ளிட்ட அவற்றுக்கு தேவையான மூலப்பொருட்களான ஜல்லிக்கற்கள் குவாரிகள் மூலமாக செல்வதால் அந்த வேலைகளிலும் தடை ஏற்படும்.
எனவே தமிழக அரசு எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எங்களை அழைத்துப் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொள்கிறோம்.
சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளுக்கு எங்களது சங்கம் துணை நிற்காது. கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் விதிக்கப்பட்ட அபராதங்களில் உடன்பாடு இல்லை. ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தடையின்மை சான்று வாங்கி தான் தொழில் நடத்துகிறோம். ஆனால், 15 வருடங்களுக்கு முன்பு இருந்த குறைகளை இப்போது கூறுகின்றனர் என்றார்.