கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சித்த மருத்துவ முகாம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 42வது வார்டு
பகுதிக்குட்பட்ட முத்தலாடம்பட்டியில் நடைபெற்ற முகாமை மேயர் கவிதா கணேசன் தொடங்கி வைத்தார். இதில் ஆணையர் ரவிச்சந்திரன், துணை மேயர் தாரணி சரவணன், சித்த மருத்துவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் பொதுமக்களுக்கு மூட்டு, கழுத்து, முதுகு வலி, எலும்பு தேய்மானம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குடிப்பழக்கம் உள்பட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டன. முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டு மருந்துகளை இலவசமாக பெற்றுச் சென்றனர்.