மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கொடி கம்பங்களை புதுப்பித்து கொடி ஏற்றுவது, மாவட்டம்தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குவது, தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, கருத்தரங்கம்-பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகளை மக்கள் பயன்பெறும் வகையில் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அரசு சார்பிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் அவரால் பயனடைந்த மக்களை இணைத்து விழாக்களை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
நூற்றாண்டு விழாவுக்கான முன்னேற்பாடாக சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (2-ந் தேதி) கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி காலை 10,30 மணிக்கு தொட்கியது. இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு லோகோ (இலச்சினை) வெளியிட்டார்.
இந்த விழாவில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தி , தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். விழா தொடக்கமாக தலைமை செயலாளர் வரவேற்று பேசினார். அதைத்தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசினார். கோபாலகிருஷ்ண காந்தி தமிழிலேயே பேசினார். நிறைவாக முதல்வர் சிறப்புரையாற்றுகிறார்.
விழாவையொட்டி கலைவாணர் அரங்கத்தில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதை ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வர், மற்றும் கோபால கிருஷ்ணகாந்தி, அமைச்சர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். அந்த படங்கள் குறித்து ஸ்டாலின், கோபால கிருஷ்ணகாந்திக்கு விளக்கி கூறினார்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. நூற்றாண்டு விழா இன்று தொடங்குவதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.