Skip to content

கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா…2ம் தேதி லட்சினை வெளியிடுகிறார் முதல்வர்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந்தேதி வருகிறது. இந்த ஆண்டு கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா தொடங்குவதால் தி.மு.க. சார்பில் மிகப்பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது பிறந்த நாள் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்.

எங்கெங்கும் கலைஞர் என்ற அடிப்படையில் மாவட்டம் தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது தி.மு.க. குடும்ப மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது, கருத்தரங்கம் பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

3-ந்தேதி சென்னை புளியந்தோப்பில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் மிகப்பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதே போல் அரசு சார்பிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள் அரசு ஊழியர்கள் பயன் அடைந்த மக்கள் ஆகியோரை இணைத்து விழாக்களை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விழாவின் முன்னேற்பாடாக சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 2-ந்தேதி கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு லோகோ (இலட்சினை) வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதில் தலைமைச்செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!