திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் இன்று நடைபெற்றது கூட்டத்தில் அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் , அம்பிகாபதி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள்
பழனியாண்டி,ஸ்டாலின் குமார் , ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆனந்த், டோல்கேட் சுப்பிரமணி, சேர்மன் துரைராஜ், செவந்தலிங்கம், கருணைராஜா, மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ் மயில்வாகனன், தொமுச குணசேகர் கருணாநிதி, கா ஜாமலை விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே. என். நேரு பேசியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் திமுக போட்டியிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உழைத்துக்கொண்டு இருந்தபோது, இத்தொகுதியை தோழமைக் கட்சிக்கு கொடுப்பது என தலைமை முடிவெடுத்தது. தலைமையின் உத்தரவை ஏற்று நமது செயல்வீரர்கள் மனம் நோகாமல், முகம் சுளிக்காமல், தொடர்ந்து கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக பாடுபட்டு சிறப்பாக செயலாற்றிய நமது கழக தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல பெரம்பலூர் தொகுதியில் நமது தோழர்கள் எதையும் எதிர்பாராமல் தொடர்ந்து அத்தொகுதியில் கடுமையாகவும், சிறப்பாகவும் பாடுபட்டீீர்கள். நாங்கள் உங்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறோம். என்றைக்கும் நீங்கள் சொல்கிற பணிகளை தட்டாமல் செய்பவனாக நான் இருப்பேன். மற்ற நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களும் இருப்பார்கள்.
ஜூன் 3ம் தேதி கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா வருகிறது. அந்த விழாவினை திருச்சி மாவட்டத்தில் உள்ள 402 ஊராட்சிகளிலும், அதில் உள்ள 2 ஆயிரம் கிராமங்களிலும் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டும். கலைஞரின் உருவப்படங்களை அலங்கரித்து நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றி்ய செயலாளர்கள் செய்ய வேண்டும்.
மாநகர திமுக சார்பில் திருச்சி, திருவரங்கத்தில் விழா கொண்டாட வேண்டும். இதுவரை இல்லாத அளவு விழா கொண்டாடப்பட வேண்டும். கலைஞர் 40 ஆண்டுகளில் செய்த பணிகளை நமது முதல்வர் தளபதி 3 ஆண்டுகளில் செய்துள்ளார். இந்தியாவிலேயே பிரதமரை எதிர்த்து, தமிழ்நாட்டின் நலனுக்காக முதலில் குரல் கொடுத்தவர் நம்முடைய முதல்வர் தான். தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு எதுவும் செய்யாத பிரதமருக்கு எதிராக அவர் குரல் கொடுத்த பிறகு தான் மற்ற மாநிலங்களில் எதிர்ப்புகள் வந்தன.
மக்களவை தேர்தலில் நம்முடைய முதல்வர் 20 கூட்டங்கள் தான் போட்டார். அதன் மூலம் மிகப்பெரிய எழுச்சியை தந்தார். தோழமை கட்சிகைளையும் அரவணைத்து தேர்தல் பணி செய்தார். கலைஞர் இருக்கும்போது நம்முடைய முதல்வர் வேன் பிரசாரம் செய்தார். அதுபோல இப்போது இளைஞரணி செயலாளர் உதயநிதி வேன் பிரசாரம் செய்தார்.
இவர்களை உருவாக்கிய கலைஞருக்கு நாம் பிரமாண்டமாக 101வது பிறந்தநாள் விழாவை எடுக்க வேண்டும். வாய்ப்பு உள்ள இடங்களில் 100 அடி உயர கொடிமரம் நட்டு அதில் கொடி ஏற்ற வேண்டும். சாலை ஓரங்களில் அதை செய்ய முடியாது. எனவே அதற்காக இடம் வாங்கி செய்ய வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள், ஒன்றிய தலைவர்கள், இதனை செய்ய வேண்டும். துறையூர்,மண்ணச்சநல்லூர், உப்பிலியாபுரம், லால்குடி, திருவரங்கம், முசிறி, தொட்டியம், என அனைத்து இடங்களிலும் சிலை அல்லது 100 அடி கொடிமரம் உருவாக்க வேண்டும். இந்த பணிகளில் எம்.எல்.ஏக்கள், ஒன்றிய தலைவர்கள் ஈடுபட வேண்டும்.
திருச்சி மத்திய பஸ் நிலையம் பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி உருவாகும் அந்த பஸ் நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும். அதில் கலைஞரின் சிலை அமைக்கப்பட வேண்டும். தலைவரிடம் இதற்கு அனுமதி பெற வேண்டும்.
தலைவர் முதன் முதலில் ஈடுபட்ட பெரி்ய போராட்டம் நங்க வரம் போராட்டம் தான். அவர் போட்டியிட்டதும் அப்போதைய திருச்சி மாவட்டமான குளித்தலையில் தான். திருச்சி தான் கலைஞரின் அரசியல் வாழ்வுக்கு தாய்வீடு. எனவே திருச்சியில் அவருக்கு சிறப்பு சேர்க்க வேண்டும். மற்றவர்களை விட நாம் கூடுதலாக பாடுபட வேண்டும்.
கூட்டம் முடிந்ததும் போய் விடாதீர்கள். யார், யார் எந்த இடத்தில் கலைஞர் விழாவுக்கு பொறுப்பு ஏற்கவேண்டும் என சொல்ல இருக்கிறேன். நீங்கள் தொடங்குங்கள். நாங்கள் உதவுகிறோம்.
3ம் தேதி கலைஞர் பிறந்தநாள் விழா முடிந்த நிலையில் மறுநாள் வாக்கு எண்ணிக்கை .அதற்கான ஏஜெண்டுகள் 3ம் தேதி இரவே தயாராக இருக்க வேண்டும். அதற்கான பொறுப்புகளை மாநகர செயலாளர் கவனிக்க வேண்டும். உறுப்பினர்கள் அட்டை வந்து உள்ளது. அவற்றை ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்களுக்கு வழங்க இருக்கிறோம். அவற்றை உறுப்பினர்களிடம் கட்டாயம் சேர்த்து விட வேண்டும். அந்த அட்டை தான் திமுக உறுப்பினருக்கு கவுரவம். எனவே அதை வழங்காமல் அப்படியே வைத்துக்கொள்ளாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.