மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இன்று 101-வது பிறந்தநாள் . இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, ஐ பெரியசாமி, பொன்முடி, மு.பெ. சாமிநாதன், பன்னீர்செல்வம், எ.வ.வேலு, சேகர்பாபு, கனிமொழி , ராசா உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள், வேலு எம்.எல்.ஏ உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து கருணாநிதியின் 101வது பிறந்தநாள் மலர் வெளியிடப்பட்டது. பின்னர் புகைப்பட கண்காட்சியையும், கருணாநிதியின் குறும்படத்தையும் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
அங்கிருந்து ஓந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் வந்தார். அப்போது மழை தூறிக்கொண்டே இருந்தது. கொட்டும் மழையி்லும் அந்த சிலையின் பீடத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவினார். இந்த நிகழ்ச்சி அரசு சார்பில் நடந்ததால் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முன்னதாக கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவபடத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் முரசொலி வளாகத்தி்ல் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத்தொடர்ந்து அறிவாலயம் வந்து அங்குள்ள அண்ணா, கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார். டில்லியில் உள்ள திமுக அலுவலகத்திலும் கருணாநிதி பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி இன்று சென்னையில் ஆங்காங்கே திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதுபோல தமிழகத்தி்ன் பல்வேறு பகுதிகளிலும் கருணாநிதி பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.