திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஜாக்(69). இவர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உருக்கமான மனு ஒன்றை அளித்தார்.
அதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை நான் கூலி வேலை செய்து எனது மனைவியும் நானும் கவுரமாகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது மனைவி வீட்டு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். வாடகை வீடாக இருந்தாலும் சந்தோஷம் இருந்தது 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து என் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து வந்து கொண்டிருந்தது. மருத்துவமனை பரிசோதனையில் எனது நுரையீரல் 85 சதவிகிதம் பழுது அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்கள். மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தேன். அவர்கள் பரிசோதனை செய்து டிபி நோய் இருப்பதாகவும் டிபி மருத்துவம் கிடையாது என்றும் சென்னை சானிடோரியம் தாம்பரம் ஆஸ்பத்திரியில் சென்று பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி விட்டார்கள்.
நானும் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ந்து 7.09.2023 அன்று சிகிச்சை முடிந்து டிபி என்று உறுதி செய்யப்பட்டு மாதாந்திர மாத்திரைகள் திருச்சி அந்தநல்லூர் மருத்துவமனையில் வாங்கி உட்கொண்டு வருகிறேன். சாப்பாடு சாப்பிட முடியவில்லை எனவும் காலை வேளையில் மட்டும் பொங்கல் சமைத்து சாப்பிட்டு மாத்திரைகள் போடுவது வழக்கம் மதியம் மற்றும் இரவு நேரத்தில் எதுவும் சாப்பிட முடியாது, விலா எலும்புகள் அனைத்தும் வலி, நுரையீரல் பாதிப்பால் மூச்சுவிட மிகவும் கஷ்டம் இப்படியாக என் உடலில் பல நோய்கள் இருப்பதால் எங்கள் சாப்பாட்டு பிரச்சனை மற்றும் வீடு வாடகை என்னால் தீர்க்க முடிவதில்லை ஐயா உண்மை சொல்லப்போனால் நாங்கள் நல்ல முறையில் சாப்பிட்டு பல மாதங்கள் ஆகின்றது நான் இதுவரை யாரிடமும் கையேந்தி யாசகம் கேட்டதில்லை தன்மானத்துடன் வாழ்ந்து விட்டோம் தன்மானத்தை விட்டு வாழ முடியவில்லை என் உடல்நிலை குறித்து ஐயா அவர்களிடம் எடுத்துக் கூறிவிட்டேன். இவை அனைத்தும் உண்மை எனவே என் மீது கருணை காட்டி என்னை கருணை கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த இந்த உருக்கமான செய்தியை கேட்டவுடன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவர்கள் கண் கலங்கினார்கள்.