Skip to content
Home » கரும்பு தோட்டத்தினை பார்வையிட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா….

கரும்பு தோட்டத்தினை பார்வையிட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், வாணதிரையான்பட்டினம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுடன் முழுக்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதன்படி அரியலூர் மாவட்டத்தில் 2,47,523 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கப்பணத்துடன் ஒரு முழுக்கரும்பும் பொங்கல் பரிசுடன் வழங்க ஏதுவாக குடும்ப அட்டைதாரர்கருக்கு டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது.

இப்பொங்கல் பரிசு வழங்குவதற்காக 2,47,523 முழக்கரும்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள அலுவலர்களால் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின்தரம், உயரம் ஆகியவை வேளாண்மைத்துறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

அதன் அடிப்படையில் இன்றயை தினம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், வாணதிரையான்பட்டிணம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கரும்பின் உயரம், தடிமன் ஆகியவை சரியாக உள்ளதா என பார்வையிட்டார். மேலும், விவசாயிகளிடமிருந்து சரியான அளவு உள்ள கரும்பினை மட்டும் கொள்முதல் செய்திடவும், கரும்பு கொள்முதல் தொடர்பான விபரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக கரும்பிற்கான தொகையினை செலுத்திடவும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார்.

முன்னதாக, அரியலூர் கோட்டாட்சியர் மற்றும் உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் 2024 ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள சேலைகள் மற்றும் வேட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததில் அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 59,658 வேட்டிகளும், 61,627

சேலைகளும், உடையார்பாளையம் வட்டத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 59,807 வேட்டிகளும், 61,335 சேலைகளும் தயார் நிலையில் உள்ளதாக சம்மந்தப்பட்ட அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வேட்டி, சேலைகள் நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), வருவாய் வட்டாட்சியர்கள் ஆனந்தவேல்(அரியலூர்), கலிலூர்ரகுமான் (ஜெயங்கொண்டம்) மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *