திருச்சி நகரின் முக்கிய வர்த்தக பகுதி மெயின்கார்டு, அதற்கு அடுத்ததாக தில்லைநகரை சொல்லலாம். தற்போது தில்லைநகருக்கு இணையாக வளரும் பகுதி திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு. இந்த சாலையின் வழியாக தினமும் காலை, மாலை வேளைகளில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 50 வாகனங்கள் சென்று வருகிறது.
அத்துடன் திண்டுக்கல், மணப்பாறை, சுற்றுலா தலங்களான கொடைக்கானல், தேனி, பழனி, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களும் இந்த சாலையில் தான் செல்ல வேண்டும். இதனால் இரவு பகல் முழுவதும் இந்த சாலையில் போக்குவரத்து இருக்கிறது.
திண்டுக்கல் ரோட்டில் கருமண்டபம் முதல் ராம்ஜிநகர் வரை மக்கள் நெருக்கமும் அதிகரித்து விட்டதுடன் சாலையின் இருபுறங்களிலும் தேநீர் கடைகள் சிறிய ஓட்டல்கள், பெரிய உணவு விடுதிகள் , வர்த்தக நிறுவனங்கள் என வரிசையாக உள்ளன.
இதனால் இந்த சாலையை (அரிஸ்டோ முதல் சோழன் நகா் வரை)விரிவாக்க தமிழக அரசு ரூ.78 கோடியில் திட்டம் தயாரித்து அதை செயல்படுத்தி வருகிறது.
விரிவாக்கம் ஒருபுறம் நடந்தாலும், சாலையின் இருபுறமும் போட்டி போட்டு ஆக்கிரமிப்புகள் நடந்து வருகிறது. வியாபாரிகள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களும் சாலையில் தான் நிறுத்தப்படுகிறது.
அத்துடன் கடைக்காரர்களும் தங்கள் வசதிக்காக சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இது தவிர தள்ளுவண்டிகள் வேறு. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்களும் நேரிடுகிறது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறைக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. இன்று(செவ்வாய்) காலை 10.30 மணிக்கு கருமண்டபம் முதல் ராம்ஜிநகர் வரை சாலையின் இருபுறமும்ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதற்காக காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து பாதுகாப்பு அளிக்கும்படி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் புகழேந்தி கேட்டு இருந்தார்.
தற்போது இந்த பகுதியில் கோயில் திருவிழா நடப்பதுடன், சில இடங்களில் சிறுசிறு பாலங்கள் கட்டுமான பணிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு நடக்கிறது. இதனால் சில இடங்களில் ஒருவழிப்பாதையாக செயல்படுகிறது. இந்த நேரத்தில் ஆக்கிரமிப்பும் அகற்றினால் திண்டுக்கல் ரோடு முற்றிலும் முடங்கிபோய் விடும். மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும்.
எனவே சில நாள் அவகாசம் கொடுங்கள் என நெடுஞ்சாலைத்துறைக்கு வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து இன்று நடப்பதாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கவில்லை. அதே நேரத்தில் இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் பெரிய பெரிய விபத்துக்கள் ஏற்படலாம். அதற்குள் இந்த ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் விருப்பமும் கோரிக்கையும் ஆகும்.
இது குறித்து கருமண்டபம் பகுதி ராமச்சந்திரன் கூறும்போது, கருமண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறையும், மாநகராட்சியும் விரைவாக மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகளை கண்காணித்து உடனுக்குடன் அகற்றாவிட்டால் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.