திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை கருமண்டபம், பால் பண்ணை பகுதியில் சாலை அதிக அளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் சாலையில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கருமண்டபம் பகுதி மக்கள் இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் ஆகியோரிடம் மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கருமண்டபம் பால்பண்ணையில் உள்ள திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இடது பக்கத்தில் உள்ள மாநாட்சிக்கு சொந்தமான சர்வீஸ் சாலை (கருமண்டபம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதல் கோரையாறு பாலம் வரை) முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆக்கிரமிப்புகளினால் திருச்சி-திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது.
மேலும் பஸ்சுக்கு செல்லும் பயணிகள் சாலையில் நிற்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் மாநகராட்சி அதிகாரிகளை அனுப்பி இந்த பகுதிகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சர்வீஸ் சாலையை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
சர்வீஸ் சாலை அரசுக்கு சொந்தமானது என 2009ம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் இந்த புகார் மனுவோடு இணைத்துள்ளோம்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மேயரும், ஆணையரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.