கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாலை திருவண்ணாமலை மலையில் மகாதீபம் ஏற்றப்படும். வழக்கமாக மலையில் மகா தீபம் ஏற்றப்படும்போது சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படும்.
கடந்த சில தினங்களுக்கு முன் பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் மலையில், பாறைகள் சரிந்து விழுந்து 7 பேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து அந்த மலையில் வல்லுனர்கள் குழுவினர் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்து உள்ளனர். அதில் பக்தர்கள் அதிக அளவில் மலை ஏறினால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில், மகா தீபம் ஏற்றும்போது வழக்கமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்த வருடம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதை கலெக்டர் முறைப்படி அறிவிப்பார். அதே நேரத்தில் அன்றைய தினம் காலையில் அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றும்போது கோவிலில் 6,300 பக்தர்களுக்கும், மகாதீபத்தை காண கோவிலில் 11,600 பேருக்கும் அனுமதி அளிக்கப்படும்.
தீபத்திற்காக 4.5டன் நெய் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.