நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. ரசாயணம் கலந்த விநாயகர் சிலையை வைத்து வழிபட மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. இதையடுத்து களிமண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வீடுகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அதேபோல் பொது இடங்களிலும் போலீசாரின் அனுமதியுடன் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
இதுதவிர கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் வீடுகளிலும் பொதுமக்கள் விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல், பாயாசம் படைத்து வணங்கி வருகின்றனர். அதன்பிறகு இன்று மாலையில் இருந்து விநாயகர் சிலைகள் நீர்நிலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளது. இதற்கிடையே தான் சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா
ண்டாடப்பட்டது. தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொருளாளராக உள்ள நடிகர் கார்த்தி தலைமையில் இந்த விழா நடந்தது. நடிகர் கார்த்தி உள்பட விழாவில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. அதன்பிறகு அலங்காரம் செய்து வைக்கப்பட்ட விநாயகருக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து விழாவில் பங்கேற்றவர்களுக்கு நடிகர் கார்த்தி உள்பட சங்க நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விநாயகர் சதுர்த்தி கொண்டாடியபோது அர்ச்சகர் வழங்கிய பிரசாதத்தை நடிகர் கார்த்தி வாங்க மறுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதாவது விநாயகர் சிலை அருகே வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாதத்தை அர்ச்சகர் எடுத்து நடிகர் கார்த்திக்கிற்கு வழங்குகிறார். அதனை கார்த்தி வாங்காமல் மற்றவர்களுக்கு கொடுங்கள் என சைகை காட்டும் வகையில் அந்த வீடியோ என்பது உள்ளது.
இதனை பார்க்கும் நெட்டிசன்கள் நடிகர் கார்த்திகை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். ஆனால் உண்மை என்னவென்றால் நடிகர் கார்த்தி அர்ச்சகரிடம் இருந்து பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுள்ளார். அதாவது விழாவில் பூஜைக்கு பிறகு முதலில் பாயாசம் மாதிரியான ஒரு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை கார்த்தி வாங்கி சாப்பிட்டார். அதன்பிறகு பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தான் கார்த்தி வாங்காமல் மற்றவர்களுக்கு வழங்கும்படி கூறினார். அதன்பிறகு தேங்காய், பழம் வழங்கப்பட்டது. அதனை கார்த்தி மறுக்காமல் வாங்கி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.