கோவை, பொள்ளாச்சியில் இருந்து அங்கலக்குறிச்சி,ஆனைமலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆழியார் பகுதிக்கு 10 B என்கின்ற எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல அந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது. அப்போது அங்கலக்குறிச்சி தபால் நிலைய பேருந்து நிறுத்தத்தில் ஆழியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக நிறைமாத கர்ப்பிணி உட்பட பயணிகள் சிலர் காத்திருந்தனர். ஆனால் அவ்வழியாக வந்த அரசு பேருந்து, பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதற்கிடையே பேருந்து நிறுத்தத்தில்,அரசு பேருந்தை நிறுத்துவதற்காக நிறைமாத கர்ப்பிணியான பெண் சைகையில் பேருந்தை நிறுத்த சொல்லியதாகவும் தெரிகிறது. ஆனால் அதை கண்டு கொள்ளாத பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது .இது குறித்த அறிந்த பகுதி மக்கள் அரசு பேருந்து ஆழியார் சென்று விட்டு திரும்ப வரும் பொழுது அங்கலக்குறிச்சி தபால் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேருந்தை மறித்து தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து பொதுமக்கள் பேருந்து ஓட்டுனரிடம் கேட்டபோது அங்கலக்குறிச்சி பகுதியில் பேருந்து நிறுத்தம் இருப்பது தனக்கு தெரியாது என்றும், தான் புதிதாக இந்த வழித்தடத்தின் பேருந்தை இயக்குவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த பதிலால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.