காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 99-வது கூட்டம் டில்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு பிரதிநிதிகள் 40 டி.எம்.சி .தண்ணீரை திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பான விவாதத்தின் முடிவில் தமிழகத்துக்கு வருகிற 31-ந்தேதி வரை நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி. வீதம் மொத்தம் 20 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட உத்தரவிடலாம் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது.
கூட்டத்தில் கர்நாடக அரசு பிரதிநிதிகள் கர்நாடகாவில் உள்ள அணைகளில் உள்ள தண்ணீர், மாநில தேவைக்காக மட்டுமே உள்ளதாகவும், எனவே தமிழகத்துக்கு நீர் திறந்து விட முடியாது என்றும் கூறினர். ஆனால் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளாமல் தண்ணீர் திறந்து விட பரிந்துரைத்தனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி , கேஆர்எஸ் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. கே. ஆர். எஸ். அணைக்கு இன்னும் இரண்டரை டிஎம்சி தண்ணீர் வந்தால் அணை நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. அதுபோல கபினி அணைக்கு மூன்றை டிஎம்சி தண்ணீர் கிடைத்தால் நிரம்பி வழியும். இன்னும் 2 நாள் இந்த பகுதியில் கனமழை பெய்தால் நிரம்பிவிடும். ஆனாலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர மனம் இல்லாமல் அடம் பிடித்து வருகிறது.
தமிழகத்தின் ஜீவாதாரமான மேட்டூர் அணையில் 15% அளவில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் தமிழ்நாட்டின் 2 மாத குடிநீர்தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் அளவில் உள்ளது. அப்படியிருந்தும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழு உத்தரவுகளை கொஞ்சம் கூட மதிக்காத கர்நாடக அரசு மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே இந்த குழுக்கள் ஏன் கூட வேண்டும். அதிகாரமில்லாத இந்த குழுக்களை கலைத்து விடலாம் என காவிரி டெல்டா விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.