காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி. காவிரி நீரை 20 நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்து இருப்பது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-மந்திரி சித்தராமையா, “கர்நாடகத்தில் இந்த முறை இயல்பான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்கூறியுள்ளது. ஆனால் இதுவரை அணைகளில் 28 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு பற்றாக்குறையாக உள்ளது. தற்போது காவிரி அணைகளில் 60 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.இது எங்களுடைய விவசாய பணிகளுக்கு தேவைப்படுகிறது. அதனால் இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. இந்த உத்தரவை எதிா்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம்’ என்றார்.
கர்நாடகத்தில் உள்ள கபினி, கே.ஆர். எஸ். அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளபோதும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தராமல் அரசியல் செய்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்தால் அங்கு அரசியல் செய்ய முடியாது என்பதால் கர்நாடகத்தில் உள்ள அரசுகள் எப்போதும் இதே நிலையைத்தான் எடுத்து வருகிறது.
தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் இருப்பது குறித்து ஆலோசிக்க கர்நாடக அரசு நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளது.நாளை மாலை இந்த கூட்டம் நடக்கிறது. கர்நாடக அரசு பிடிவாதமாக தண்ணீர் தர மறுப்பது தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. குறிப்பாக டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள்.
கர்நாடக அரசின் இந்த முடிவு குறித்து தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட்டால் உருவாக்கப்பட்ட ஒழுங்காற்று குழுவின் உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொல்வது சுப்ரீம் கோர்ட்டின் ஆணையை எதிர்த்து சொல்வது போனறதாகும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு சொல்வது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும். சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, இந்தியா முழுமைக்கும் பொதுவானது.
தமிழ்நாட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டு செல்வதற்கு வழி தெரியும். இந்த விவகாரத்தில் பிரச்சினை எழாமல் இருக்க ஒழுங்காற்று குழுவின் உத்தரவை ஏற்று நடைமுறைப்படுத்துவதுதான் அண்டை மாநிலங்களுக்கு இடையே நட்புறவை பலப்படுத்துவதாக இருக்கும். இது தெரியாதவரல்ல கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா. அதுபோலவே நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமாருக்கும் இது நன்றாக தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.