224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நட க்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி படைத்தவர்களாக உள்ளனர். மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் வாக்குப்பதிவை எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக நடத்த பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 5 பேருக்கு மேல் ஒன்றாக செல்ல கூடாது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம் நடத்த தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது சொந்த தொகுதியான சிகாரிபுராவில் இன்று காலை வாக்களித்தார். இந்த தொகுதியில் எடியூரப்பா மகன் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இன்போசிஸ் அதிபர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி(72) இன்று காலையிலேயே வாக்களித்தார். இதுபோல மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் கர்நாடகத்தில் வாக்கு உள்ளதால் அவர் அங்கு இன்று காலை வாக்களித்தார். இன்று பதிவாகும் வாக்குகள் மே 13-ந் தேதி எண்ணப்படுகிறது.