நம்ம ஊரில் பெண்கள் சண்டை போட்டுக்கொண்டால், என்ன குழாயடி சண்டை மாதிரி இருக்கே என்பார்கள். கர்நாடகத்தில் பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நம்ம ஊர் குழாயடி சண்டையை பின்னுக்கு தள்ளி நம்ம ஊர் சொர்ணா அக்கா ஸ்டைலில் சண்டை போட்டுக்கொண்டனர். ஆபாச தகவல், அசிங்கமான பேச்சு என தெருச்சண்டை தேவலாம் என்கிற அளவுக்கு ஐஏஎ1், ஐபிஎஸ் மோதிக்கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் சிரிப்பாய் சிரிக்குது.
இந்த குழாயடி சண்டையால், உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய் என்கிற அளவில் இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். அந்த சுவாரஸ்ய சண்டையை என்னவென்று பார்ப்போம்.
கர்நாடாகவில் அறநிலையத்துறை கமிஷனராக இருப்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்துாரி(39) . ரோகிணி கோலாரில் கலெக்டராக பணியாற்றிய போது ஐஏஎஸ் அதிகாரி ரவி 2015 ம் ஆண்டு தற்கொலை செய்தார்.
ரோகிணி உடனான காதல் விவகாரத்தால் தான் அவர் தற்கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை ரோகிணி முற்றிலும் மறுத்தார்.
இந்த நிலையில், இவர் மீது ஐபிஎஸ் அதிகாரி ரூபா(பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் சசிகலா இருந்தபோது அங்கு சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தவர்) அடுக்கடுக்காக 19 குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அதில் ரவி தற்கொலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தன் நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார் என குற்றம் சாட்டி படங்கள் சிலவற்றையும் நேற்று முன்தினம் வெளியிட்டார். அத்துடன் ஆளும் பா.ஜ.க. எம்.எல்.ஏக்களை அவர் சந்தித்த புகைபடத்தையும் வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து ரூபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக ரோகிணி கூறினார். ரோகிணியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டது தொடர்பாக ரூபா மீது ரோகிணியின் கணவர் சுதீர் ரெட்டி பெங்களூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
ரூபாவின் குற்றச்சாட்டுகள் குறித்து ரோகிணியிடம் கேட்ட போது ரூபா மனநோயாளி, அவர்விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்றார்.
இதனால் கடும் கோபமடைந்த ரூபா நேற்று தன் முகநூல் பதிவில், நான் விரைவில் குணம் அடைய வேண்டும் என ரோகிணி கூறி உள்ளார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய தன் நிர்வாண புகைப்படத்தை அழித்தது பற்றி ஏதாவது கூறினாரா, சவாலை எதிர்கொள்ள அவருக்கு தைரியம் இல்லை. தன் கணவர் மூலம், என் மீது புகார் கொடுக்க வைத்துள்ளார்’ என குறிபிட்டிருந்தார்.
இரு பெண் உயர் அதிகாரிகள் மோதலால் இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரிடமும் விளக்கம் கேட்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தலைமை செயலர் வந்திதா சர்மாவுக்கு உத்தரவிட்டார்.
இதனிடையே நேற்று பெங்களூரு விதன் சவுதாவுக்கு சென்ற ரோகிணி சிந்துாரி, தலைமை செயலர் வந்திதா சர்மாவை சந்தித்து ரூபா மீது புகார் கடிதம் கொடுதார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோகிணி என் மீது ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஆதாரமற்றவை என் மீது உள்ள தனிப்பட்ட பகை காரணமாக இப்படி செய்கிறார். இது குறித்து தலைமை செயலரிடம் விளக்கம் அளித்து உள்ளேன் என்றார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் விதான சவுதாவுக்கு வந்த ரூபாவும் தலைமை செயலரை சந்தித்து 35 நிமிடங்கள் பேசினார். ரோகிணி மீது 7 குற்றச்சாட்டுகள் அடங்கிய மூன்று பக்க புகார் மனுவை அளித்தார்.
பின்னர் பேசிய ரூபா, ரோகிணி சிந்துாரி மீது எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. அவர் செய்த தவறுக்கு தண்டனை வேண்டும் என்று தான் கேட்கிறேன். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து 15 நாட்களுக்கு முன்பே உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினேன்.
அந்த தகவலை அவர்கள், அரசிடம் கொண்டு போகவில்லை. அவரை பாதுகாக்கும் முயற்சி நடக்கிறது. என் புகார் மீது கண்டிப்பாக விசாரணை நடைபெற வேண்டும்.
ரோகிணியால் என்னை போல் பல பெண் அதிகாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்தும், தலைமை செயலர் வந்திதா சர்மாவிடம் கூறி உள்ளேன் என்றார்.
இந்த நிலையில் இன்று ரூபாவும், ரோகிணியும் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். ரோகிணி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே மைசூரில் பணியாற்றியபோது அவர் ஷில்பா நாக் என்ற பெண் அதிகாரியுடன் மோதியதால் அவர் அங்கிருந்து மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த குழாயடி சண்டையும் தேர்தலில் பிரதானமாக இருக்கும் என கூறப்படுகிறது.