கர்நாடாகாவில் உள்ள தொழிற்சாலைகள், பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50% நிர்வாக பணிகளிலும் 75% நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர், 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிக்கும் கன்னடத்தை தெளிவாக பேசவும் படிக்கவும் எழுதவும் திறன் கொண்டவர் இதற்கான தகுதியான நபர் என்று இந்த மசோதா தெரிவிக்கிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் கன்னடத்தை ஒரு மொழியாக கொண்ட மேல்நிலை பள்ளிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கர்நாடக அரசின் புதிய மசோதாவுக்கு உயிரி தொழில்நுட்ப மருந்து தயாரிப்பு நிறுவனமான பயோகான் அதிபர் கிரண் மஜும்தார் ஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.கன்னடர்களுக்கு பணி வழங்குவதற்கான பயோகான் வகிக்கும் முன்னணி இடத்தை விட்டுவிட முடியாது என்று கிரண் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே கன்னடர்களுக்கு 50% வேலை அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஐ.டி. நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களையே 50% பணிகளில் நியமிக்க கட்டாயப்படுத்தினால் தொழில்நுட்ப திறனாளர்களுக்கு இடம் மறுக்கப்பட்டு விடும் எனவும் திறமையாளர்களை வேலைக்கு அமர்த்த முடியாவிட்டால் ஐ.டி. நிறுவனங்கள் கர்நாடகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் எனவும் நாஸ்காம் தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான மோகன்தாஸ் பையும் அரசின் வேலை ஒதுக்கீட்டு யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னடர்களுக்கு 50% வேலைகளை அளிக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தற்போது கர்நாடக அரசு பின்வாங்கியுள்ளது.
கன்னடர்களுக்கே 50% வேலைகளை ஒதுக்க வேண்டும் என்ற மசோதா, விரிவான ஆலோசனைக்குப் பிறகே செயல்படுத்தப்படும் என கர்நாடக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.