கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளிலும் நடந்த வாக்குப்பதிவு பொதுவாக அமைதியாக நடந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஆரம்பம் முதல் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. முதல்சுற்று ஓட்டு எண்ணிக்கை நிலவரப்படி காங்கிரஸ்113 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. பாஜக 86 தொகுதிகளிலும், மஜத 21தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் முன்னணியில் இருந்தாலும், பகல் 12 மணி அளவில் தான் தெளிவான ஒரு நிலை தெரியவரும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
காங்கிரஸ் முன்னணி தலைவர்களான சித்தராமையா(வருணா தொகுதி), கனகபுராவில் டிகே சிவக்குமார், காந்தி நகரில் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் முன்னணியில் உள்ளனர். பாஜகவில் இருந்து வந்த ஜெகதீஷ் ஷெட்டர் பின்தங்கினார்,அதே நேரத்தில் பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திர சிகாரிபுரா தொகுதியில் முன்னணியில் உள்ளார். தமிதுக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி சிக்மகளூரில் பின்தங்கி உள்ளார். மஜத தலைவர் குமாரசாமி சென்னப்பட்னா தொகுதியில் பின்தங்கி உள்ளார். குமாரசாமி மகன் நிகில் முன்னணியில் உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பின்தங்கியுள்ளார். காங்கிரஸ் 113 இடங்கள் பிடித்து தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்குமா என்பது இன்னும் 2 மணி நேரத்தில் தெரியவரும். அதே நேரத்தில் பாஜகவுக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது. காரணம், குமாரசாமி கட்சிக்கும் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை. எனவே பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க முடியாதபடி, காங்கிரசுக்கு ஆதரவாக கர்நாடக மக்கள் தெளிவான முடிவினை தந்துள்ளார்கள் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் 9 அமைச்சர்கள் பின்தங்கி உள்ளனர். பெங்களூரு நகரில் தமிழர்கள் அதிகம் வாழும் புலிகேசி நகர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி முன்னணியில் உள்ளது.