காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கடந்த 11ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் ஜூலை 31-ம் தேதி வரை தினமும் 1டிஎம்சி கன அடி நீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீரை திறப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மறுத்தாலும், தண்ணீர் திறந்து விட்டே ஆகவேண்டும் என்ற நிலைக்கு கர்நாடகம் தள்ளப்பட்டு விட்டது. கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு விநாடிக்கு 25 ஆயிரத்து 933 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.இதனால் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 107.60 அடியாக உயர்ந்துள்ளது. இதே அளவு தண்ணீர் வந்தால் கே. ஆர்.எஸ் அணை இன்னும் ஒருவாரத்தில் நிரம்பிவிடும். அதன்பிறகு கேஆர்எஸ்சில் இருந்து உபரிநீர் மேட்டூர் அணைக்கு தான் திறக்கப்படும்.
ஹேமாவதி அணைக்கு 14 ஆயிரத்து 550 கன அடி நீரும், ஹாரங்கி அணைக்கு 12 ஆயிரத்து 827 கன அடி நீரும் வந்துகொண்டிருக்கிறது. இந்த இரு அணைகளும் நிரம்பினால் அதன் உபரி நீர் கே. ஆர்எஸ் அணைக்கு தான் வரும். இந்த இரு அணைகளும் இன்னும் இரு தினங்களில் நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைசூரு மாவட்டத்தில் உள்ள இன்னொரு அணையான கபினி அணைக்கு விநாடிக்கு 29 ஆயிரத்து 360 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் 19.52 டிஎம்சி முழு கொள்ளளவைக் கொண்ட கபினி அணையின் கொள்ளளவு 19.25 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. இது அணை முழு கொள்ளளவை எட்டியதாகவே பார்க்கப்படுகிறது. அணையின் பாதுகாப்பை கருதி விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.இந்த தண்ணீர் அப்படியே காவிரியில் வந்து கலந்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி கரையோரத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.