கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில், உடுப்பி, சிக்மகளூரு, ஹசன் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் முடிந்தது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. சிக்கோடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, அங்குள்ள காக்வாட் தொகுதியைச் சேர்ந்த அக்கட்சி எம்.எல்.ஏ., ராஜு காகே நேற்று பிரசாரம் மேற்கொண்டார். ஜுகுலாடோ பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால், இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும். நான் என் வார்த்தையில் எப்போதும் உறுதியாக இருப்பேன். ஏன் அனைவரும் மோடி, மோடி என்று அவர் பின்னாலேயே செல்கிறீர்கள். நாட்டில் 140 கோடி மக்கள் உள்ளனர். இங்குள்ள இளைஞர்களும் மோடி மோடி என்றே சொல்கின்றனர். இங்கு உங்களுக்கு ஓர் பிரச்னை என்றால் அவர் வரமாட்டார்; நாங்கள்தான் வருவோம். மோடிக்கு 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான விமானம் உள்ளது. நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான கோட்சூட் அணிந்து கொள்கிறார். நானும் படித்தவன் தான்; எனக்கும் புத்திசாலித்தனம் உள்ளது. பிரதமர் மோடி இறந்தால், நாட்டை திறம்பட நடத்துவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். இந்த மிரட்டல் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ல் பா.ஜ.,வில் இருந்து காங்கிரசுக்கு தாவிய ராஜு காகே, முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட பலரை தாக்கி பேசி, சர்ச்சையில் சிக்கிய நிலையில், மீண்டும் அதேபோன்று பேசியுள்ளார்.