கர்நாடக சட்டசபைக்கு நாளைமறுநாள் (10ம் தேதி) தேர்தல் நடக்கிறது. கடந்த 1 மாதமாக பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கடைசி நாளான இன்று தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்தனர். பா.ஜ.கவை பொறுத்தவரை பிரதமர் மோடி 7 நாட்கள் பிரசாரம் செய்துள்ளார். தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை அவர் நேற்று நிறைவு செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்க ளின் முதல்-மந்திரிகள், மத்திய, மாநில அமைச்சர் கள் என 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி, காங்கிர தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் , பிரியங்கா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா, முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி, கட்சியின் மாநிலத் தலைவர் சி.எம். இப்ராகிம் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே இன்று பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். விறுவிறுப்பாக நடந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. நாளை மறுநாள் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.