கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள பிரியபட்ணாவில் கடந்த 24 ஆம் தேதி 150 ஏரிகளில் சாகுபடிக்காக நீரை திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஹெச்.சி.மகாதேவப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா ஏரி நீரை திறந்துவிடுவதற்காக மோட்டாரின் பொத்தானை அழுத்தினார். அப்போது பொத்தான் வேலை செய்யாததால் அவர் கோபம் அடைந்தார். உடனே, மின்வாரிய ஊழியர்களை அழைத்து அதனை சரிபார்க்குமாறு கூறினார்.
ஊழியர்கள் அந்த பொத்தானை அழுத்திய போதும் மோட்டார் இயங்கவில்லை. இதையடுத்து ஊழியர்கள் மோட்டாருக்கு இணைக்கப்பட்ட மின்சார இணைப்பு உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, பொத்தானை சரி செய்தனர். இதனிடையே சித்தராமையா, “சாமுண்டீஸ்வரி மின்வாரிய நிர்வாக இயக்குநர் எங்கே?” என கேட்டார். அப்போது அவர் விடுமுறையில் இருப்பதாக தெரிவித்ததால், மேலும் கோபமடைந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் சாமுண்டீஸ்வரி மின்வாரிய நிர்வாக இயக்குநர் சி.என்.ஸ்ரீதரை பணியில் அலட்சியமாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அவரிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.