காவிரி நீரை வழங்க மறுக்கும், கர்நாடக அரசை கண்டித்து, நாகையில், 5 மாவட்ட விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்,கருகிய பயிரை பாடையில் ஊர்வலமாக எடுத்து வந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்;
தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை தராமல் கர்நாடகா அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனால் தண்ணீர் இன்றி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன. இந்நிலையில் காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து இன்று நாகையில், தஞ்சை திருவாரூர் திருப்பூர் ஈரோடு நாகை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் பங்கேற்ற கண்டன பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த
கண்டன பேரணி ஆர்ப்பாட்டத்தில், காவிரி தனபாலன், ஈரோடு கள்ளு இயக்கத் தலைவர் நல்லுசாமி, தஞ்சை கக்கரை சுகுமார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.
அவுரித்திடலில் இருந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை புறப்பட்ட கண்டன பேரணியில், பெண் விவசாயிகள் கருகிய பயிரை தலையில் வைத்து ஒப்பாரி பாடலை பாடி கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பயிருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், காய்ந்த பயிரை பாடையில் வைத்து ஊர்வலமாக விவசாயிகள் எடுத்து வந்தனர். விவசாயிகளின் இந்த நூதன போராட்டம் காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 8,கோடி மக்களின் தண்ணீர் பிரச்சனை மற்றும் உணவு தேவையை தீர்க்க உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு உரிய தீர்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள காவிரி தனபாலன், குறுவை பயிர் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.