காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்ராமையா மைசூர் மாவட்டத்தில் உள்ள வருணா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக பாஜக தற்போதைய வீட்டு வசதி துறை அமைச்சர் சோமண்ணாவை களம் இறக்கியது. இதனால் இந்த தொகுதி கூடுதல் நட்சத்திர அந்தஸ்து பெற்றது. லிங்காயத்து மக்கள் அதிகம் உள்ளதால் பாஜக இந்த முடிவை மேற்கொண்ட நிலையில், இருவருக்கும் சம பலம் இந்த தொகுதியில் இருப்பதாக கருதப்படுகிரது.
இந்த நிலையில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்கு சாவடியை ஆய்வு செய்வதற்காக வந்த பாஜக வேட்பாளரும் வீட்டு வசதி துறை அமைச்சருமான சோமண்ணாவை வாக்குச்சாவடி செல்ல எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. வருணா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட
நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு சோமன்னா ஆய்வு செய்வதற்காக சென்றார். அவரை வாக்குச்சாவடிக்குள் செல்ல விடாமல் அங்கு இருந்த மக்கள் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.
இதனால் கொதித்துப் போன சோமன்னா அங்கிருந்த போலீசாரிடம் தன்னை வாக்குச்சாவடியை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லும் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அவர் வாக்கு சாவடியை ஆய்வு செய்தார். இருப்பினும் தொடர்ந்து அங்குள்ளவர்கள் எதிர்ப்பு கோஷம் எழுப்பியதால் கடுப்பாகி போன சோமண்ணா உடனடியாக அந்த இடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார். சம்பவத்தால் அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டது