கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெயசீலன், பூதலூர் ஒன்றிய செயலாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில போராட்ட குழு செயலாளரும், தஞ்சை மேற்கு மாவட்ட தலைவருமான சிமியோன் சேவியர்ராஜ் வரவேற்றார்.
இதில் உடனடியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட துரித நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண வேண்டும். சம்பா, தாளடி சாகுபடிக்கான உரிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு உடன் அறிவிக்க வேண்டும். கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் கரும்புகளை கைகளில் ஏந்தியப்படி கோஷங்கள் எழுப்பப்பபட்டது.
மாநில தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில துணைத்தலைவர்கள் நெல்லை ஜீவா, அனந்தமுருகன், காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் பழ.இராசேந்திரன், சாமி.கரிகாலன், இராசு.முனியாண்டி, வைகறை, இந்திய ஜனநாயக கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வினோபா, மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.