கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவர்களின் திருமணம் 2ம் தேதி (நேற்று முன்தினம்) அரிசிகெரேயில் நடக்க இருந்தது. இந்நிலையில், திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பாக மணப்பெண்ணான இளம்பெண் ‘மேக்கப்’ போட முடிவு செய்தார். அதன்படி அவர், அரிசிகெரேயில் உள்ள கங்கா என்பவருக்கு சொந்தமானபியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அங்கு மணப்பெண்ணுக்கு கங்கா ‘மேக்கப்’ போட்டு அழகுப்படுத்தினார். இந்நிலையில் திருமணத்துக்கு சில நாட்கள் இருப்பதால், ‘மேக்கப்’ கலைந்து விட கூடாது என்பதற்காக, அவர் வெந்நீரில் ஆவி பிடித்துள்ளார். அப்போது அப்பெண்ணுக்கு திடீரென முகம் கருமை நிறமாக மாறியுள்ளது. மேலும் முகம் வெந்து கொப்புளங்கள் வந்தன. கண்கள் மற்றும் கன்னமும் வீங்கியது. இந்நிலையில் முகம் வீங்கி கருமை நிறமாக மாறியதால் திருமணத்தை வாலிபர் நிறுத்தினார். மேலும் பியூட்டி பார்லர் மீது புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகம் கருமையாக மாறியதால் நிறுத்தப்பட்ட திருமணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.