Skip to content
Home » கார்கில் வெற்றிதினம்…. லடாக்கில் தளபதிகள் அஞ்சலி

கார்கில் வெற்றிதினம்…. லடாக்கில் தளபதிகள் அஞ்சலி

1999-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் ஊடுருவி அதனை ஆக்கிரமித்தனர்.  இதனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மூண்டது. மிகப்பெரிய மலைத்தொடரில் இந்த போர் நடந்தது. சவால்கள் நிறைந்த இந்த போரில், பாகிஸ்தானுக்கு இந்தியா பலத்த அடி கொடுத்தது. அந்த போர் கார்கில் போர் என அழைக்கப்படுகிறது. போரை தவிர்க்க இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எதற்கும் பாகிஸ்தான் செவிசாய்க்கவில்லை. இதனால் போர் தீவிரம் அடைந்தது. விமானப்படை உதவியுடன், டைகர் மலைப் பகுதியை முதலில் இந்தியா கைப்பற்றியது. அடுத்து வரிசையாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்திருந்த ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநர் லே என அனைத்து பகுதிகளையும் இந்தியா கைப்பற்றியது. இறுதியாக ஜூலை 26-ந்தேதி, கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றி, அங்கு நம் நாட்டு கொடியை இந்திய ராணுவ வீர்கள் நாட்டினர்.

இந்த போரில்  இந்திய தரப்பில் 543 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் பல்லாயிரகணக்கானோர் பலியானார்கள். கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதியை கார்கில் வெற்றி தினம்  என்று கொண்டாடி வருகிறோம். இந்த நாளில், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

கார்கில் வெற்றி தினத்தில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு, லடாக்கின் திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவகத்தில் முப்படைகளின் தளபதிகள் இன்று அஞ்சலி செலுத்தினர். இதன்படி, முப்படைகளின் தலைவர் அனில் சவுகான், இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமை தளபதி ஆர். ஹரி குமார் மற்றும் விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சீத்தல் ரக 3 ஹெலிகாப்டர்கள் போர் நினைவகம் மீது மலர்களை தூவியபடி பறந்து சென்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *