சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் அமலாக்க துறை சோதனை நடத்தி வருவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதே மோடி அரசின் வாடிக்கையாகி விட்டது. இது மோடி அரசின் அச்சுறுத்தல் நடவடிக்கை என்று கார்கே தெரிவித்துள்ளார். அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசுக்கு எதிரான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துவது நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாக்கத்துறையின் நடவடிகைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்..