காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காரைக்கால் துணை ஆட்சியர் ஜி.ஜான்சன் போலீஸில் புகார் அளித்தார். மேலும், வருவாய்த் துறை சார்பில் யாருக்கும் மனைப் பட்டா வழங்கவில்லை என்றும், இதுதொடர்பாக மக்கள் யாரிடமும் பணம் தர வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறி யிருப்பதாகவும், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி.ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும், போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட காரைக்கால் சிவராமன், திருமலைராஜன், காரைக்கால் நகராட்சி நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்தி ஆகியோரை போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில், மாவட்ட துணை ஆட்சியர் ஜி.ஜான்சனை, மாவட்ட காவல் அலுவலகத்துக்கு நேற்று வரவழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடத்தியதில் கோயில் இடம் மோசடியில் துணை கலெக்டர் ஜான்சன் கோடிக்கணக்கான பணம் பெற்றது அம்பலமானது. எனவே அவரையும் இன்று கைது செய்தனர். இதனால் காரைக்காலில பரபரப்பு ஏற்பட்டுள்ளது.