திருமங்கலம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட மதுரை – திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. இந்த சுங்கச்சாவடியை விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அமைத்துள்ளதாகவும், இந்த சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள், வணிகர்கள் பல்வேறு போராட்டங்ளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 10-ம் தேதி முதல் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் வாகன ஓட்டிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுங்கக்கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கும் வரை ஜூலை 30ம் தேதி முதல் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்ததை அடுத்து இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேச்சுவார்த்தையில், 2020 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தது போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் பயணிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, “கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ சுற்றுவட்டார மக்கள் ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு சுங்கக் கட்டணம் இன்றி செல்லலாம் . உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்காக, கப்பலூர் சுங்கச் சாவடியில் பிரத்யேக வழி அமைக்க வழிவகை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்