உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடந்தது. இதில் இந்த போட்டியின் அம்பாசிடர் என்ற வகையில் சச்சின் டெண்டுல்கர் அழைக்கப்பட்டார். மேடையில் அவர் பரிசுகளும் வழங்கினார். ஆனால் இந்திய அணியை முதன் முதலில் உலக அரங்கில் தூக்கி நிறுத்திய கபில்தேவ் அழைக்கப்படவில்லை. இவர்தான் 1983 உலக கோப்பை கிரிக்கெட்டில் மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி, இந்தியா முதன் முதலாக உலக கோப்பை வெல்ல வழிவகுத்தார்.
இதுபோல 2011ல் இந்தியா டோனி தலைமையில் உலக கோப்பையை வென்றது. நேற்று மைதானத்தில் இந்த 2 வெற்றி வீரர்களும் காணப்படவில்லை. இதுபற்றி கபில்தேவிடம் கேட்டபோது, இந்த உலக கோப்பை போட்டியை 1983ல் வெற்றித்தேடித்தந்த அனைவரும் நேரில் காணவேண்டும் என நான் விரும்பினேன். ஆனால் னனக்கு அழைப்பு வரவில்லை, பல பணிகளுக்கு மத்தியில் அவர்கள் இதை மறந்திருக்கலாம் என்று பதில் அளித்தார்.
கபில்தேவ் அழைக்கப்படாததற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளான நிலையில் அவர்களுக்கு ஆதரவாக கபில் தேவ் கருத்து தெரிவித்ததால் அவர் அழைக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார். கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் கபில் தேவை ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.