அரியலூர் மாவட்டம் திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் ஆண்டுதோறும் காணும் பொங்கலை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் இளைஞர்கள் புதுமண தம்பதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இங்கு வரும் அனைவரும் தங்களது வீடுகளில் தயார் செய்து கொண்டு வரும் பலவகையான சாதங்கள், தேங்காய் சாதம், புளி சாத உள்ளிட்ட சாதங்களும் கொண்டைக்கடலை, சுண்டல், தட்டைப்பயறு, பாசிப்பயறு, நிலக்கடலை அவித்தும் வறுத்த நிலக்கடலை பொட்டுக்கடலை அவல் வெல்லம் பொரி உள்ளிட்ட பாரம்பரிய தின்பண்டங்களையும் பலருக்கும் கொடுத்து மகிழ்கின்றனர்.
அதே போல புதினா மல்லிக்கீரை தேங்காய் பயன்படுத்தி சட்னி துவையல் செய்து சாத வகைகளுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவதும் தொன்னை வாழை இலை பாக்குமட்டைத் தட்டு உள்ளிட்ட சூழலுக்கேற்ற பொருட்களை பயன்படுத்தி உணவருந்துவதும் தொடர்நிகழ்வாக திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் நீண்ட கால நட்புகள் உறவுகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டு அன்பையும் பரிமாறிக் கொள்வதோடு உணவையும்
பரிமாறிக் கொள்கின்ற வாய்ப்பினை இந்நிகழ்வு தருவதாக கூறுகின்றனர்.
இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் திருமழபாடியைச் சுற்றியுள்ள கிராமங்களான கீழக்காவட்டாங்குறிச்சி, தட்டான்சாவடி, பாளையபாடி, அன்னிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, மேட்டுத்தெரு, கண்டராதித்தம், புதுக்கோட்டை, இலந்தைக்கூடம், குலமாணிக்கம், செம்பியக்குடி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொள்ளும் அரிய நிகழ்வாக திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் ஆண்டுதோறும் கூடும் காணும் பொங்கல் பட்டம் விடும் நிகழ்வு நடைபெறும். மாலை நேரத்தில் 4 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடைபெறும். இப்பகுதியைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் 100 ஆண்டுக்கும் மேலாக நடைபெறும் பட்டம் விடும் நிகழ்வு நடைபெறுவதாக கூறுகின்றனார். சிறுவர்கள், பெண்கள், புதுமண தம்பதிகள் உள்ளிட்ட பலரும் தங்கள் வீடுகளில் தயாரித்த பட்டங்களை எடுத்து வந்து ஆற்றில் பறக்க விடுகின்றனர். சிறுவர்களுக்கு அவர்களுடன் உடன் வந்த பெரியவர்கள் பட்டங்களை பறக்க உதவுகின்றனர் யாருடைய பட்டம் அதிக உயரத்தில் பறக்குது என்பதை பார்ப்பதில் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியை உருவாக்குகின்றது.
வெளியூரில் உள்ள உறவினர்களும், பல இடங்களில் பணியாற்றும் தங்களது நண்பர்களும் இந்த காணும் பொங்கல் என்று திருமழபாடி ஆற்றில் சந்தித்து உரையாடுவது இந்த மகிழ்ச்சியை தருவதாக பெரியவர்கள் கூறுகின்றனர்.