சென்னை போரூர் சுற்று வட்டார பகுதிகளில், வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போரூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கஞ்சா கடத்தி வந்த சூர்யா (30), பிரவீன் (29) ஆகிய இரு போலி நிருபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போரூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கஞ்சா கடத்தலுக்கு தலைவனாக திருவேற்காட்டை சேர்ந்த வினோத் குமார்(37) செயல்பட்டு வந்ததாக தெரியவந்தது. இவர் ஒரு புலனாய்வு பத்திரிகையில் ஆசிரியராக வேலை செய்வதாகவும், ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த வினோத்குமார் அவரது கூட்டாளிகள் தேவராஜ், பாலாஜி ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள், லோடு வேன், 2 கார்கள், 4 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். புதிதாக லோடு வேன் ஒன்றை வாங்கி அதில் வீட்டை காலி செய்து பொருட்களை எடுத்து செல்வது போல் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் அந்த வாகனத்தில் வைத்து கைது செய்த வினோத்குமார், அந்த லோடு வேனில் ஆந்திராவிற்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்துள்ளார்.
போலீசார் மடக்கினால் பத்திரிகையாளர் என்ற போர்வையில் ஏமாற்றிவிட்டு சென்று வந்தது தெரியவந்தது. இவரிடம் இருந்து இரண்டு கார்கள், 20 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள், வேன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்குகளில் மட்டும் 50 லட்ச ரூபாய் இருந்ததும் தெரியவந்துள்ளது. அந்த கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்..