தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியை சேர்ந்த பத்து மீனவர்களை கடலோர காவல் படை கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களது படகுகளை திருப்பி கொடுக்கவும் வேண்டும் . இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.பிக்கள் குழு தலைவர் கனிமொழி இன்று டில்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வலியுறுத்தினார்.
அத்துடன் இந்த கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் அமைச்சரிடம் அளித்தார். மேலும் அவர், குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி அயன்பொம்மையாபுரத்தை சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை தேடும் பணியை துரிதப்படுத்தி அவரை கண்டுபிடித்து தரக் கோரியும், கனிமொழி வலியுறுத்தினார்.
அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கனிமொழி எம்.பியிடம் உறுதி அளித்தார்.