அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடை பெறும் திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 2-ம் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கானபக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நவம்பர் 2-ம் தேதி காலையில் யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலைக்கு புறப்படுகிறார். 7 மணிக்கு யாகபூஜை தொடங்குகிறது.
ஆறாம் நாள் (7.11.2024) திருவிழாவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.7-ம் நாள் திருவிழாவில் (8.11.2024) திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3:30-க்கு விஸ்வரூபம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம் நடக்கிறது..12-ம் நாள் அன்று மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.