சினிமா ஸ்டண்ட் இயக்குநரும், இந்து முன்னணியின் கலை, இலக்கிய அணி மாநிலத் தலைவருமான கனல் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி ஒரு வீடியோவைப் பதிவேற்றம் செய்து, “வெளிநாட்டு மத கலாசாரத்தின் உண்மை நிலை இதுதான்?!… மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்! மனம் திரும்புங்கள்!” என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் இளம்பெண்ணுடன் நடனம் ஆடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ, “கிறிஸ்தவ பாதிரியார்களின் மாண்பை குலைக்கும் நோக்குடன், கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மதம் மாறிய இந்துக்களை அவமானப்படுத்தும் நோக்குடனும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்த ஆஸ்டின் பெனட் என்பவர் நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது வழக்குப் பதிந்த நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீசார் நேற்று அவரை விசாரணைக்கு அழைத்திருந்தனர். அதன்படி நேரில் ஆஜரான கனல் கண்ணனிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் அவரை போலீஸார் கைதுசெய்தனர்.