திருச்சி அடுத்த அந்தநல்லுர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை கிராமம் தெற்கு தெரு கிராம மக்கள் காவிரி குடி நீர் கோரியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நேற்று( 18.04.2023 ) பைப் லைன் தோண்டும் போது காவிரி குடி நீர் பைப்பை உடைந்ததை சரி செய்ய கோரியும் இன்று காலை 8.50 மணியளவில் கம்பரசம்பேட்டை கிராம மக்கள் சுமார் 250 பேர் திருச்சி – கரூர் பைபாஸ் ரோடு கம்பரசம்பேட்டை அக்ரஹாரம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 மணி நேரம் மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் தொடர்ந்து காவிரி குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கும் படியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தோண்டப்பட்டபோது உடைந்த காவிரி குடிநீர் குழாயை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் மூலம் சரி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்ரீரங்கம் தாசில்தார், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்,ஜீயபுரம் காவல் ஆய்வாளர், ஆகியோர் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் ஸ்ரீரங்கம் பகுதி வருவாய் ஆய்வாளர், கம்பரசம்பேட்டை கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஜீயபுரம் காவல்துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர் .