அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி்நடக்கிறது. இதில் தற்போதைய அதிபர், 81 வயதான ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பிலும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் நடத்திய நேருக்கு நேர் பிரசாரத்தில் பைடன் திணறினார். இது ஜனநாயக கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகும் பைடன் பல நேரங்களில் பிரசார மேடைகளில் பெயர்களை மாற்றி, மாற்றி கூறினார். போதாக்குறைக்கு இப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டது.
ஏற்கனவே போட்டியில் இருந்து பைடனை நீக்கி விட்டு வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என ஜனநாயக கட்சியில் குரல் எழும்பியது. தற்போது முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட பலர் பைடனுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கிறார்கள். இதனால் போட்டியில் இருந்து விலகுவது பற்றி பைடன் ஆலோசித்து வருவதாக வாஷிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை பைடன் போட்டியில் இருந்து விலகினால், அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரீஸ் நிறுத்தப்படலாம் என்றும் பேசப்படுகிறது. கமலா தமிழ்நாட்டில் மன்னார்குடி பகுதியை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாயார் காலத்தில் அவர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.